
ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சென்னையில்தான் இது முன்பு மிகவும் விசேஷமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.
இன்று காணும் பொங்கலையொட்டி சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மெரீனா கடற்கரை முழுவதும் ஜன சமுத்திரமாக மாறியுள்ளது.
கடற்கரையில் நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. காமராஜர் சாலையில் வாகனங்கள் போவதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் உள்ளது.
இதேபோல பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மாமல்லபுரம், திருச்சி முக்கூடல், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூடி காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
காணும் பொங்கலின்போது கடலில் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். சென்னையில் 5000 போலீஸார் கடற்கரைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Source: Oneindia
0 comments:
Post a Comment