Thursday, January 15, 2009

அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு

Jallikattu
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சையில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளிலேயே உலகப் புகழ் பெற்றது அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுதான்.

இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளின்படி ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு, மருத்துவக் குழுக்கள், பார்வையாளர்களுக்கு தனி கேலரி, குடிநீர் வசதி உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது.

காளைகள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே களத்தில் இறக்கி விடப்படும்.

தஞ்சையில் ஒருவர் பலி ...

இதற்கிடையே, தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திமிறி ஓடிய காளைகளைப் பிடிக்க வீரர்கள் வீராவேசத்துடன் பாய்ந்தனர்.

அப்போது முருகானந்தம் என்ற 20 வயது வாலிபர் காளை குத்தியதில் படுகாயமடைந்தார். குடல் சரிந்த நிலையில் அவர் தஞ்சை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனஆல் அங்கு அவர் உயிரிழந்தார்.

25 பேர் காயமடைந்தனர். அனைவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்துவதில் மோதல் ..

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பொன்னமராவதி அருகே உள்ளது குன்னையூர். இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி சாமி கும்பிடுவதிலும், ஜல்லிக்கட்டை நடத்துவதிலும், கொன்னைப்பட்டி மற்றும் கொப்பனாப்பட்டி ஆகிய இரு கிராம மக்களுக்கிடையே பிரச்சினை வெடித்தது.

வழக்கமாக கொப்பனாப்பட்டி கிராமத்தில்தான் ஜல்லிக்கட்டை நடத்துவார்களாம். ஆனால் இந்த முறை, எங்கள் ஊரில் வந்து ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று கொப்பனாப்பட்டி கிராமத்தினர் கூறி விட்டனர்.

ஆனால் அதை நிராகரித்த கொன்னைப்பட்டி கிராமத்தினர், குன்னையூர் மாரியம்மன் கோவிலுக்கு 300க்கும் மேற்பட்ட காளைகளுடன் வந்துள்ளனர்.

பின்னர் மாரியம்மனை வணங்கிய அவர்கள், கொப்பனாப்பட்டி மக்களை சபிப்பது போல வேண்டியுள்ளனர். இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த கொப்பனாப்பட்டி கிராமத்தினர் ஆத்திரமடைந்து மோதலில் குதித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் முற்றியது. இதையடுத்து போலீஸார் புகுந்து தடியடி நடத்திக் கலைத்தனர். ஆனால் அதற்கும் கூட்டம் மசியவில்லை. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. அப்படியும் மோதல் தீராததால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து இரு கிராம மக்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இரு கிராமங்களுக்கு இடையே கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதால் பெருமளவில் போலீஸார் குவிக்கப்படடுள்ளனர்.

Source: Oneindia

0 comments: